
Bharathidasan kavithaigal in Tamil | Bharathidasan padalgal in Tamil
Bharathidasan kavithaigal in tamil : பெரும் புகழ் கொண்ட பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ எனவும், ‘பாவேந்தர்’ எனவும் அழைக்கப்பட்டார். புரட்சிக்கவி பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சிந்தும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் ஆவர். பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்த முறையாக கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவர். பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையினை தன் கவிதைகள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தலைச்சிறந்த படைப்புகள் (Bharathidasan kavithaigal in Tamil) பற்றியறிய இங்கு மேலும் தொடர்ந்து படிக்கவும்.
Bharathidasan kavithaigal in Tamil | Bharathidasan poems |
Bharathidasan kavithaigal in Tamil | பாரதிதாசன் கவிதை வரிகள்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!..
-பாவேந்தர் பாரதிதாசன்.
பாரதிதாசன் கவிதைகள் | Bharathidasan kavithaigal in Tamil
நித்திரத்தில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு.
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.
தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
-பாவேந்தர் பாரதிதாசன்.
Bharathidasan kavithaigal in Tamil | Bharathidasan kavithaigal
தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்
பண்டைப் பெரும் புகழ் உடையாமோ? இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா!
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?
தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா?
தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா?
தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம்
தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா?
செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?
தில்லி நரிதான் நடுங்கிற்றா இல்லையா?
முந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை
முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா?
தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?
தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?
தமக்குத் தமிழகம் அடிமையே என்னும்
சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?
Bharathidasan kavithaigal in Tamil | Bharathidasan padalgal in Tamil
தமிழியக்கம் – மாணவர் என்ற தலைப்பில் பாரதிதாசனின் வரிகள்
தமிழ்நாட்டின் கண்ணொப்பீர்
கனியி ருக்க
நிற்கின்ற நெடுமரத்தில்
காய்வர நினையாதீர்
மூதுணர்வால்
முற்கண்ட எவற்றினுக்கும்
முதலான நந்தமிழை
இகழ்த லின்றிக்
கற்கண்டாய் நினைத்தின்பம்
கைக்கொண்டு வாழ்ந்திடுவீர்
நன்றே என்றும்
ஆங்கிலத்தைக் கற்கையிலும்
அயல்மொழியைக் கற்கையிலும்
எந்த நாளும்
தீங்கனியைச் செந்தமிழைத்
தென்னாட்டின் பொன்னேட்டை
உயிராய்க் கொள்வீர்
ஏங்கவைக்கும் வடமொழியை,
இந்தியினை எதிர்த்திடுவீர்
அஞ்ச வேண்டாம்.
தீங்குடைய பார்ப்பனரின்
ஆயுதங்கள் “இந்தி” “வட
சொல்” இரண்டும்
பார்ப்பான் பால் படியாதீர்;
சொற்குக்கீழ்ப் படியாதீர்
உம்மை ஏய்க்கப்
பார்ப்பான்; தீ துறப்பார்ப்பான்
கெடுத்துவிடப் பார்ப்பான் எப்
போதும் பார்ப்பான்
ஆர்ப்பான் நம் நன்மையிலே
ஆர்வமிக உள்ளவன் போல்!
நம்பவேண்டாம்.
பார்பானின் கையை எதிர்
பார்ப்பானையே பார்ப்பான்
தின்னப் பார்ப்பான்
தமிழின்பேர் சொல்லி மிகு
தமிழரிடைத் தமிழ் நாட்டில்
வாழ்ந்திட் டாலும்
தமிழழித்துத் தமிழர் தம்மை
தலை தூக்கா தழித்துவிட
நினைப்பான் பார்ப்பான்
அமுதாகப் பேசிடுவான்
அத்தனையும் நஞ்சென்க
நம்ப வேண்டாம்
தமிழர்கடன் பார்ப்பானைத்
தரைமட்டம் ஆக்குவதே
என்று ணர்வீர்.
தமிழரின்சிர் தனைக்குறைத்துத்
தனியொருசொல் சொன்னாலும்
பார்ப்பான் தன்னை
உமிழ்ந்திடுக மானத்தை
ஒரு சிறிதும் இழக்காதீர்
தமிழைக் காக்க
இமையளவும் சோம்பின்றி
எவனுக்கும் அஞ்சாது
தொண்டு செய்வீர்
சுமை உங்கள் தலைமீதில்
துயர்போக்கல் உங்கள் கடன்!
தூய்தின் வாழ்க!
பாரதிதாசன் கவிதை வரிகள் | Bharathidasan kavithaigal in Tamil
தமிழியக்கம் – பெருஞ்செல்வர் என்ற தலைப்பில் பாரதிதாசனின் வரிகள்
கோயில்பல கட்டுகின்றீர்
குளங்கள் பல வெட்டுகின்றீர்
கோடை நாளில்
வாயிலுற நீர்ப்பந்தல்
மாடுரிஞ்ச நெடுந்தறிகள்
வாய்ப்பச் செய்தீர்
தாயினும் பன் மடங்கான
அன்போடு மக்கள் நலம்
தாவு கின்றீர்
ஆயினும்நம் தமிழ்நாட்டில்
செய்யத்தக்க தின்னதென
அறிகி லீரே.
தமிழுயர்ந்தால் தமிழ்நாடு
தானுயரும் அறிவுயரும்
அறமும் ஓங்கும்
இமயமலை போலுயர்ந்த
ஒரு நாடும் தன்மொழியில்
தாழ்ந்தால் வீழும்
தமிழுக்குப் பொருள்கொடுங்கள்
தமிழறிஞர் கழகங்கள்
நிறுவி டுங்கள்.
தமிழ்ப்பள்ளி கல்லூரி
தமிழ்ஏடு பலப்பலவும்
நிலைப்பச் செய்வீர்!
நேர்மையின்றிப் பிறர்பொருளில்
தம்பெயரால் கல்லூரி
நிறுவிப் பெண்ணைச்
சிர்கெடுத்தும் மறைவழியாய்ச்
செல்வத்தை மிகவளைத்தும்
குடி கெடுத்தும்
பார் அறியத் தாம் அடைந்த
பழியனைத்தும் மறைவதற்குப்
பார்ப்பான் காலில்
வேர்அறுந்த நெடுமரம்போல்
வீழ்ந்தும் அவன் விட்டதுவே
வழியாம் என்றும்
அறத்துக்கு நிறுவியதை
வருவாய்க்கென் றாக்குவதில்
அறிவு பெற்ற
மறப்பார்ப்பான் செந்தமிழ்
மாணவரைக் கெடுத்தாலும்
எதற்குமே வாய்
திறக்காமல் தாமிருந்தும்
செந்தமிழ்க்குப் பாடுபடல்
போல் நடித்தும்
சிறப்பார்போல் இல்லாது
செந்தமிழ்க்கு மெய்யுளத்தால்
செல்வம் ஈக.
சிங்கங்கள் வாழ் காட்டில்
சிறுநரிநாய் குரங் கெண்கு
சிறுத்தை யாவும்
தங்கி நெடுங் கூச்சலிடும்
தன்மைபோல் தமிழ்நாட்டில்
தமிழே யன்றி
அங்கங்கே அவரவர்கள்
தம் மொழிக்கும், பிற மொழிக்கும்
ஆக்கம் தேடி
மங்காத செந்தமிழை
மங்கும் வகை செய்வதற்கு
வழக்கும் சொல்வார்
தமிழியக்கம் – மங்கையர் முதியோர் எழுக என்ற தலைப்பில் பாரதிதாசனின் வரிகள்
ஒரு வானில் பன்னிலவாய்
உயர்தமிழ்ப் பெண்களெல்லாம்
எழுக! உங்கள்
திருவான செந்தமிழின்
சிறுமையினைத் தீர்ப்பதென
எழுக! நீவிர்,
பெருமானம் காப்பதற்கு
வாரீரேல் உங்கள் நுதற்
பிறையே நாணும்!
மருமலர்வாய்த் தாமரையும்
கனியுதடும், நன்னெஞ்சும்
வாட்டம் எய்தும்!
நகர்நோக்கிப் பசுந்தோகை
நாடகத்து மாமயில்கள்
நண்ணி யாங்குப்
பகர்கின்ற செந்தமிழின்
பழிநீக்கப் பெண்களெல்லாம்
பறந்து வாரீர்!
மிகுமானம் காப்பதற்கு
வாரீரேல் வெண்ணிலவு
முகஞ்சு ருங்கும்
மகிழ்வான மலர்க்கன்னம்
வாய்மையுளம் வாட்டமுறும்
மலர்க்கண் நாணும்.
தண்டூன்றும் முதியோரே!
தமிழ்தொண்டென்றால் இளமை
தனைஎய் தீரோ?
வண்டூன்றும் சிற்றடியால்
மண்டுநறும் பொடிசிதறும்
பொதிகை தன்னில்
பண்டூன்றும் திருவடியால்
பச்சைமயில் போல்வந்து
தமிழர்க் காவி
கொண்டூன்றி வருந்தமிழ்த்தாய்
கொண்டகுறை தவிர்ப்பதற்குக்
குதித்து வாரீர்!
பிரம்புவளை மெய்யுடையீர்
ஆருயிரில் வாரியிட்டுப்
பிசைந்த தான
உரம்பெய்த செந்தமிழுக்
கொன்றிங்கு நேர்ந்ததென
உரைக்கக் கேட்டால்
நரம்பெல்லாம் இரும்பாகி
நனவெல்லாம் உணர்வாகி
நண்ணி டீரோ?
இரங்குநிலை கொண்டதமிழ்
ஏற்றகுறை தவிர்த்திடநீர்
எழுச்சி கொள்வீர்.
அன்னையினை எதிர்த்தார்க்கும்
அவள் மேன்மை மறந்தார்க்கும்
அயர்ந்த வர்க்கும்
மின்னைவிழி உயர்ந்ததுபோல்
மெய்யுரைப் பெற்றது போல்
தமிழ்ச்சாப் பாடு
தன்னையுணர் விப்பதற்குச்
சாரைச் சிற்றெறும்பென்னத்
தமிழ்நாட் டீரே,
முன்னைவைத்த காலைப்பின்
வையாமே வரிசையுற
முடுகு வீரே!
ஒத்துண்ணல் என்ற தலைப்பில் பாரதிதாசனின் வரிகள்
இட்டதோர் தாமரைப்பூ
இதழ் விரித்திருத்தல் போலே
வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறு இருந்து அருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்கம் இல்லை!
நீலவான் ஆடைக்குள் என்ற தலைப்பில் பாரதிதாசனின் வரிகள்
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோல முழுதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? – வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!
ஆற்றுநடை என்ற தலைப்பில் பாரதிதாசனின் வரிகள்
நோய் தீர்ந்தார், வறுமை தீர்ந்தார்,
நூற்றுக்கு நூறு பேரும்!
ஓய்வின்றிக் கலப்பை தூக்கி
உழவுப்பண் பாடலானார்!
சேய்களின் மகிழ்ச்சி கண்டு
சிலம்படி குலுங்க ஆற்றுத்
தாய் நடக்கின்றாள், வையம்
தழைகவே தழைக்க வென்றே!
தமிழை என்னுயிர் என்பேன் என்ற தலைப்பில் பாரதிதாசனின் வரிகள்
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
பாரதிதாசன் கவிதைகள் | Bharathidasan kavithaigal in tamil
பாரதி பற்றி பாரதிதாசனின் வரிகள்
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்!
திறம்பட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்!
என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்.
படைத் தமிழ் என்ற தலைப்பில் பாரதிதாசனின் வரிகள்
இருளினை, வறுமை நோயை
இடருவேன்; என்னுடல் மேல்
உருள்கின்ற பகைக்குன்றை
நான் ஒருவனே உதிர்ப்பேன்;
நீயோ கருமான்செய் படையின் வீடு;
நான் அங்கோர் மறவன்! கண்ணற்
பொருள்தரும் தமிழே!
நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி!
தென்றலுக்கு நன்றி என்ற தலைப்பில் பாரதிதாசனின் வரிகள்
கமுகொடு நெடிய தென்னை
கமழ்கின்ற சந்தனங்கள்
சமைக்கின்ற பொதிகை அன்னை
உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்!
தமிழ் எனக் ககத்தும், தக்க
தென்றல் நீ புறத்தும் இன்பம்
அமைவுறச் செய்வதை நான்
கனவிலும் மறவேன் அன்றோ?
அழகின் சிரிப்பு என்ற தலைப்பில் பாரதிதாசனின் வரிகள்
சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!
நேர்மை வளையுது என்ற தலைப்பில் பாரதிதாசனின் வரிகள்
தொழிலாச்சு – உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு
நிழலாச்சு!
வறுமைக்கு மக்கள்நலம்
பலியாச்சு – எங்கும்
வஞ்சகர் நடமாட
வழியாச்சு!
சோகச் சுழலிலே
ஏழைச் சருகுகள்
சுற்றுதடா – கண்ணீர்
கொட்டுதடா
மோசச் செயலாலே
முன்னேற்றம் கண்டோரின்
ஆசைக்கு நீதி
இரையாகுதடா – அன்பை
அதிகார வெள்ளம்கொண்டு
போகுதடா (சோக)
பழந்துணி அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத
பண்பு உள்ளம்
இருந்தநிலை மறந்து
இழுக்கான குற்றம்தன்னைப்
புரிந்திட லாமென்று
துணியுதடா – நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா
Suggested: |
Read also:
- தமிழர் தைத்திருநாளாம் பொங்கல் வாழ்த்து செய்திகள்
- தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் 7 சிறந்த திருவிழாக்கள்
- தமிழ் தாய் வாழ்த்து முழு பாடல் வரிகள் | தோற்றம் மற்றும் முக்கியத்துவம்
- தமிழ் கற்போம்: உயிர்மெய் எழுத்து என்றால் என்ன?
- ஒரு வருடத்தில் எத்தனை வாரங்கள் உள்ளன?
- நா பிறழ் நெகிழ் சொற்றொடர் பயிற்சிகள்
Visit also: